ஆசிரியர் தினம்
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ள நபர்கள் குரு. நமக்கு இந்த உலகை கற்பிக்கும் ஆசான். குருகுலக் கல்வி முறையில் இருந்து வகுப்பறை கல்விக் கூடங்கள் என மாற்றம் ஏற்பட்ட போதிலும், மாற்றம் காணாதவை ஆசிரியர்கள் மட்டுமே.
ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர் பணி என்பது, ஒரு தெய்வீகமான பணியாகத்தான் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒரு மனிதனை அனைத்து குணநலன்களோடு, பொருளாதார ரீதியாக எதிர்காலத்தில் அவன் சிறந்து விளங்குவதற்கான வழியையும் காட்டி, அதற்கேற்ற வகையில் அவனை உருவாக்குபவர்கள் ஆசிரியர்கள்.
ராதாகிருஷ்ணன்
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள், 1888 செப்டம்பர் 5-ம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஏழை தெலுங்கு நியோகி என்ற பிராமணப்பிரிவில் சர்வபள்ளி வீராசாமிக்கும், சீதம்மாக்கும் மகனாகப் பிறந்தார்.
1954 ஆம் ஆண்டு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
ஆசிரியர் நாள்
ஆசிரியர் நாள் (Teachers Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியராகப் பணியைத் தொடங்கி இந்தியாவின் குடியரசுத் தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் நினைவாக அவரது பிறந்த நாளன்று கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் பணியே அறப்பணி:
வெறும் ஏட்டுக் கல்வியை மட்டும் போதிப்பது ஆசிரியரின் பணி அல்ல. அவற்றையும் தாண்டி, வாழ்க்கையை வாழ கற்றுத் தர வேண்டும். இதன் அடிப்படை கூறுகளாக ஒழுக்கம், ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, பொது அறிவு உள்ளிட்டவற்றைக் கூறலாம். இப்பணியைச் செய்வதற்கு தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் ஆசிரியர் பணியை நேசிப்பவராகவும் செயல்பட வேண்டும்.
ஒரு குழந்தையை முதன் முதலில் இந்த பூமிக்கு கொண்டு வருபவள் தாய். இரண்டாவதாக அந்த குழந்தையை சான்றோன் ஆக்குபவர் தந்தை.
மூன்றாவதாக அந்த குழந்தையை தன் சொல்லாலும், எழுத்தாலும் ஒரு மனிதனாக உருவாக்குபவரே ஆசிரியர். எனவே தான் தெய்வத்திற்கு முன் மூன்றாமிடத்தில் ஆசிரியரை வைத்திருக்கின்றனர் நம் மூதாதையர் .
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.
பொன்மொழிகள்
நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸண்டர்
கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். – ஜிக்ஜேக்ளர்
ஆசிரியர் தின வாழ்த்து மடல்
அனைவருக்கும் கல்வியை ஆர்வமாய் கற்பித்து
இனிய அணுகுமுறையில்
ஈடுபாட்டுடன் பணிசெய்து
உயர்த்தும் குறிக்கோளை
ஊருக்கெல்லாம் தெரியப்படுத்தும்
எளிமைக்கு இலக்கணமான
ஏணிப்படி நீர்தான் !
ஐயமே இல்லை
ஒளிமிகு பாரதத்தை
ஓங்கச் செய்யும்
ஔவை வழி நடப்பவரும் நீர்தான்
அஃதே ஆசானின் பெருமை.
ஆசிரியர் பணி
ஆசிரியப் பணியை புனிதப் பணியாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன் உதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அப்படி செயல்பட்டவர் தான் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். நம் நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன், மாபெரும் தத்துவ மேதையாக விளங்கினார்.


0 Comments