தேசியக்கொடி பற்றிய தகவல்கள்
சுதந்திர இந்தியாவின் அடையாளமாகவும், சுதந்திர போராட்ட வீரர்களின் உயிர்மூச்சாக பட்டொளி வீசும் இந்திய தேசிய கொடி பற்றிய சுவாரசிய தகவல்கள்
தேசியக்கொடியானது நம் நாட்டின் வளர்ச்சிப் பாதையில் நடத்துவதற்கான சிறப்பான ஒன்றாகும்.
தேசபிதா மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட தலைவர்களும் லட்சகணக்கான மக்களும் கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஆங்கிலேயரிடம் போராடி, ஆகஸ்டு 15, 1947 ஆண்டு சுதந்திரம் (Independence day) பெற்றதால் தான், இன்று நாமும் நம் சந்ததியினரும் சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.
இப்படி போராடி பெற்ற சுதந்திரத்தின் அடையாளமாகவும், நாட்டிற்காக தன் இன்னுயிரை நீத்த தியாகிகளை போற்றும் நினைவாக உருவானது தான், நம் இந்திய தேசியக் கொடி (National Flag) .
தேசியக்கொடி வண்ணம்
தேசிய கொடியில் காவி, வெண்மை, பச்சை என மூன்று வண்ணங்கள் உள்ளதால், மூவர்ணகொடி என்று அழைக்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இம்மூன்று வண்ணத்திற்கும் ஒரு காரணம் உண்டு.
- காவி நிறம் – பலத்தையும், தைரியத்தையும் குறிப்பதற்காகவும்,
- வெண்மை நிறம் – உண்மை மற்றும் அமைதியையும்.
- பச்சை நிறம் – வளர்ச்சி, பசுமை மற்றும் விவசாய செழிப்பைக் காட்டுவதாக அமைந்துள்ளது.
நடுவில் 24 ஆரங்களை கொண்டு இடம் பெற்றுள்ள அசோக சக்கரம், கடல் மற்றும் மேகத்தின் நிறத்தை குறிக்கும் வகையிலும், குறிப்பாக தர்மம் காக்கபட வேண்டும் என்ற நிலைபாட்டில் அமைந்துள்ளது.
கொடி அமைப்பு
22 முறை மாற்றப்பட்ட தேசிய கொடி 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் ராஜேந்திர பிரசாத் தலைமையில், அபுல் கலாம் ஆசாம், சரோஜினி நாயுடு, அம்பேத்கார் ஆகியோர் கொண்ட ஒரு அவசர அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த அமைப்பு சுதந்திரத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் ஒரு கொடி வேண்டுமென தீர்மானித்தது. இதற்காக பல கொடிகள் உருவாக்கப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்படி இதுவரை 22 முறை இந்திய கொடியானது மாற்றப்பட்டது.
பிங்காலி வெங்கய்யா
விஜயவாடாவில் 1921 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் கூட்டம் நடந்தது.அப்போது ஆந்திராவைச் சேர்ந்த பிங்காலி வெங்கய்யா (Pingali Venkaiyya) இந்தியர்கள் எல்லோருக்கும் பொதுவான ஒரு கொடியை வடிவமைத்து மகாத்மா காந்தியிடம் வழங்கினார். இவர் ஆந்திராவின் மசிலிபட்டி என்னும் ஊரில் (2,ஆகஸ்ட்,1876 – 4,ஜூலை,1963) பிறந்தார். இவர் நிலவியல் பட்டம் பெற்று வைரச்சுரங்கத்தில் வேலைபார்த்தார். தென்னாப்பிரிக்காவில் நடந்த போரில் இந்திய பிரிட்டிஷ் படையில் சேர்ந்து பணிபுரிந்தார். அப்போது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.
இவர் உருவாக்கிய கொடியில் இந்து,முஸ்லீம்களை குறிக்கும் வகையில் கொடியில் சிவப்பு மற்றும் பச்சை நிறம் இடம் பெற்றிருந்தது. அதைப் பார்த்த காந்தி அதில் வெள்ளை நிறத்தை சேர்க்குமாறு கூறினார்.அதனுடன் ஒரு சுழலும் சக்கரத்தை வைக்குமாறு ஆலோசனை கூறினார். இக்கொடியில் இடம் பெற்றிருந்த நிறமானது வெவ்வேறு மதங்களைக் குறிக்குமாறு அமைந்திருந்தன.இதில் இடம் பெற்றிருந்த சக்கரம் எல்லா வண்ணங்களிலும் இடம் பெற்றிருந்தன.
கொடியின் அளவு
இந்திய கொடியின் அளவானது 2:3 என்ற விகிதத்தில் இருக்கும். (நீளமானது அகலத்தை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்கும்).
கொடியின் மூன்று நிறங்களும் சமமான அகலத்தையும் நீளத்தையும் பெற்றிருக்கும்.
சமநிலையை போற்றுவதற்காக அவ்வாறு நிறங்கள் இடம்பெற்றுள்ளன.
தர்மச்சக்கரம் (அசோக சக்கரம்)
பட்டொலி வீசிப் பறக்கும் நமது மூவர்ண தேசிய கொடியில் மத்தியில் தர்மச்சக்கரம் உள்ளது. இதில் 24 ஆரங்கள் உள்ளன. அந்த ஆரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொறு கோட்பாட்டை விளக்குகிறது...
1. அன்புடமை2. அருளுடைமை3. அறமுடைமை4. ஆசையில்லாமை5. அறிவுடைமை6. அழுக்காறின்மை7. இனிமையுடைமை8. இன்னா செய்யாமை9. களவு செய்யாமை10. ஈதல்11. காமம் கொள்ளாமை12. ஊரோடு ஒழுகல்13. ஒழுக்கம் உடைமை14. மது உண்ணாமை15. சூது கொள்ளாமை16. பண்புடைமை17. ஊக்கமுடைமை18. பொது உடைமை19. பொருளுடைமை20. பிறனில் விழையாமை21. போர் இல்லாமை22. பொய் சொல்லாமை23. கல்வியுடைமை24. ஒற்றுமை
கொடியைக் கையாளும் விதிமுறைகள்
கொடி தயாரிப்பிற்கு என்று பல விதிமுறைகள் உண்டு. சர்வதேச அளவு முறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறை 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 முதல் கொடியின் நீள,அகலம்,நிறங்களின் அளவு, அடர்த்தி,பளபளப்பு, துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத் தன்மையையும் பற்றியும் விவரிக்கிறது. கொடித்தயாரிப்பில் விகிதாசாரங்கள் மீறுவது மிகப் பெரியகுற்றமாகும். கொடித் துணியானது காதி என்கின்ற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்க வேண்டும். பருத்தி,பட்டு மற்றும் கம்பளி இவற்றில் ஒன்றால் கையினால் நெய்யப்பட்ட கைத்தறித் துணியாகத்தான் இருக்க வேண்டும்.
தேசியக் கொடியை கையாளவும், அதற்கு உரிய மரியாதை செய்யவும் இந்திய தேசியக் கொடி சட்டம் (FlagCode Of India) 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.இதில் பல்வேறு விதிமுறைகள் உள்ளன. தேசியக் கொடியை எந்த விளம்பரத்திற்கும் பயன்படுத்தக் கூடாது. பொது இடங்களில் தேசியக் கொடியினை கிழித்தல்,எரித்தல், அவமதித்தல் போன்றவை தண்டனைக்குரிய குற்றமாகும். தேசியக் கொடியை அணியும் உடை, பயன்படுத்தும் கைத்துண்டுகள், கைக்குட்டைகளில் பயன்படுத்தக் கூடாது. தேசியக் கொடி மண், தரை, தண்ணீரில் படும்படியாக பறக்கவிடக் கூடாது. கொடி கிழிந்த நிலையில். நிறம் மங்கிய நிலையிலோ ஏற்றக்கூடாது.
சூரிய உதயத்திற்கு பின்புதான் தேசியக் கொடி ஏற்றப்பட வேண்டும். அதே போல சூரிய அஸ்தமனத்திற்குள் இறக்கி வைக்கப்பட வேண்டும். தலைவர்கள் மறைவின் போது தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும். தேசியக் கொடிக்கு எந்த வகையிலும் அவதூறு,அவமரியாதை ஏற்படாத வகையில் கையாள வேண்டும், ஏற்ற வேண்டும்.
தேசியக் கொடியை தங்கள் இஷ்டத்திற்கு ஏற்ற முடியாத நிலை 2002 ஆம் ஆண்டு வரை இருந்தது. இதற்குப் பின்னர் பொது மக்கள் எங்கு வேண்டுமானாலும் தேசியக்கொடியை ஏற்றி மகிழலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் இந்தியக் குடிமக்களுக்கு தேசியக் கொடியை தங்கள் வீடுகளில் பறக்கவிடலாம் என்கின்ற உரிமையும் கிடைத்துள்ளது.



0 Comments