Ticker

6/recent/ticker-posts

Marriage thaali kattuvathu

 திருமணத்தில் தாலி கட்டுதல் பின்னணி என்ன?

     சங்க காலத்திலிருந்து திருமணம்(Marriage) என்பது இரு மனங்கள் இணைந்து திருமணம் என்ற பந்தத்தில் ஒன்று சேர்கின்றனர். இதனை களவு, கற்பு என இரண்டாக கூறுகின்றனர். திருமணத்திற்கு முன்பு களவு வாழ்க்கை என்றும் திருமணத்திற்குப் பின்பு கற்பு வாழ்க்கை என்றும் கூறுகின்றனர். 

     திருமணம் என்பது சங்க காலத்தில் அவ்வளவு எளிதல்ல ஏனென்றால் போர் புரிந்து, வீரத்தை வெளிப்படுத்தி பின்புதான் திருமணம் செய்து கொடுப்பார்கள்.


 
    தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று.

     இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக, 

  • மரபு வழி மணம்
  • சேவை மணம்
  • போர் நிகழ்த்தி மணம்
  • துணங்கையாடி மணம்
  • பரிசம் கொடுத்து மணம்
  • ஏறு தழுவி மணம்
  • மடலேறி மணம்

ஆகிய மண(Marriage) முறைகளைக் காணலாம்.


"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது." 

    ‘தாலம் பனை” என்ற பனை ஓலையினால் செய்த ஒன்றையே பண்டையக்காலத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் கட்டி வந்தபடியால் இதற்குத் தாலி என்ற பெயர் வந்தது. தாலமாகிய பனை ஓலையினால் செய்தது என்பது இதன் பொருள்.


    மார்பிலே உயிரோட்டம் உள்ள இதயத்தில் இத்தாலி தட்டுப்பட்டுக் கொண்டு இருக்க, அது சீன மருத்துவ முறையான அக்யூபக்சர் முறைபோல் செயல்படுகின்றதாம். எனவே, தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்பது மாத்திரம் அன்றி பெண்ணுக்கு வலிமை என்றும் சொல்லப்படுகிறது.


தாலியின் மகிமை

       மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது. ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

  • தெய்வீகக் குணம்
  • தூய்மைக் குணம்
  • மேன்மை
  • தொண்டு
  • தன்னடக்கம்
  • ஆற்றல்
  • விவேகம்
  •  உண்மை
  • உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

      இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு அணியப்படுகின்றது.


"மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன் 

நன்கலம் நன்மக்கட் பேறு." 


   மணமகன் மேற்கு திசை நோக்கி திரும்பிப் பெண்ணின் கழுத்தில் திருமாங்கல்யம் பூட்டுவார். அப்போது சொல்லப்படும் மந்திரம் 

"மாங்கல்யம் தந்துனானேன
மமஜீவன ஹேதுநா!
கண்டே பத்நாமி ஸுபகே
த்வம ஜீவ சரதஸ்சதம்!!”

   அதாவது, ‘ஓம்! பாக்கியவதியே, நான் சீரஞ்சீவியாக இருப்பதற்குக் காரணமாக மாங்கல்யத்தை உன் கழுத்தில் கட்டுகிறேன். நீயும் நூறாண்டு வாழ்வாயாக’ என்று அர்த்தம்.

அம்மி மிதித்தல்

      பெண்ணின் வலதுகாலை மணமகன் கையால் தூக்கி அம்மியில் வைத்து பெருவிரலுக்கு அடுத்துள்ள விரலில் மெட்டி வைத்து அணிவிப்பார். இந்தக் கல்லைப் போல் நிலையாக நின்று உன் எதிரிகளைச் சகித்துக் கொள். இது பெண்ணிற்கு கற்பையும் ஆணுக்கு ஒழுக்கத்தையும் புகட்டுகின்றது. கல் எப்படி எதையும் தாங்குமோ அதுபோல் வாழ்கையிலும் இன்ப துன்பங்களைக் கண்டு கலங்காமல் உறுதியான கொள்கைகளைக் கடைப்பிடித்து நடக்கவேண்டும் என்று உணர்த்துகிறது.

அட்சதை 

            பழுதுபடாத பச்சைஅரிசியைப் போல் வாழ்க்கையும் பழுதுபடாமல் இருக்கவேண்டும் என்பதற்காகவே ஆசி வழங்கும் போது பெரியவர்கள் அதைத் தெளிக்கிறார்கள். (நுனி முறியாத முழு அரிசியாக இருக்கவேண்டும்).

நெல்லில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட முளையுள்ள அரிசியுடன் மஞ்சள்மா, பன்னீர், மலர் இதழ்கள் ஆகியவை கலந்து அட்சதை தூவுவதே முறையாகும்.

ஆரத்தி எடுத்தல் 

              ஒரு தட்டில் 3 வாழைப்பழத் துண்டுகள் வைத்து அதன் நடுவே திரியைச் செருகவேண்டும். இலகுமுறை ஒரு நெருப்புக் குச்சியில் பஞ்சைசுற்றி நெய்யில் தேய்த்து வாழைபழத்தின் நடுவே குத்துவதாகும்.

ஆரத்தி எடுக்கும் போது யாருக்கு திருஷ்டி கழிக்கின்றோமோ அவரை நிற்க வைத்து (கிழக்கு முகமாக அல்லது வடக்கு பார்க்க நிற்கவேண்டும்). அவரை இறைவனாக நினைத்து இறைவனுக்கு எப்படிக் கற்பூரம் காட்டுகிறோமோ அதேபோல் ஆரத்தித் தட்டைச் சுற்றவேண்டும் (வலம் சுழியாக).

மணமக்களுக்கு எடுக்கும்போது மணமகன் பக்கத்தில் மேலெழும்பி மணமகளின் பக்கத்தில் கீழிறங்கவேண்டும். கீழே 3 முறை செய்யவேண்டும். கீழே 3 தரம் காட்டி பின் மேலெழும்பிச் சுற்ற வேண்டும்.

  • தாலி கட்டிய பின் மணமகள் மணமகளின் உச்சந்தலையில் குங்குமத்தால் திலகமிடுவார். இது அவள் தன் கணவனுக்கே உரியவள் என்பதை எடுத்துக்காட்டவே. அத்தோடு அவ்விடத்தில் தான் மகா லட்சுமி வசம் செய்கின்றாள்.
  • மாங்கல்யம் சூட்டும்போது கெட்டிமேளம் கொட்டுவது சபையில் உள்ளோர் யாராவது தும்முதல், அபசகுன வார்த்தைகள் பேசுதல் போன்றவை மணமக்களிற்குக் கேட்கக்கூடாது என்பதற்காகவே.

    கணவன் மனைவி எந்த ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வந்தாள் அந்த இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும். காலங்கள் கடந்தாலும் மாற்றங்கள் வந்தாலும் மாறாது நிலைத்து நிற்கும் பந்தம் திருமண பந்தம் ஒன்றே ஆகும்.


       கழுத்தில் எத்தனை வகையான நகைகள் அணிந்தாலும், மஞ்சள் சரடினால் ஆன தாலியை அணிந்தால் அதன் மகத்துவம் தனி தான். இதைத்தான் இறைவனும் விரும்புவான். கணவருக்கும் ஆயுள் நீடிக்கும் என்கின்றனர் மகான்கள். 

Post a Comment

0 Comments