Ticker

6/recent/ticker-posts

TAMIL PROVERBS Meaning - தமிழ் பழமொழிகள் இதுதான் உண்மையான காரணமா?

     தமிழ் பழமொழிகள்

    

     தமிழ் பழமொழிகளில் நமக்குத் தெரியாத பல செய்திகள் காணப்படுகின்றன. ஆனால் நமக்கு  இதுதான் உண்மையான காரணம் என்று தெரியாது அந்த பழமொழிகளின் உண்மையான காரணங்களை இங்கே காண்போம்... 


    பழமொழிகளுக்கு இந்த காலகட்டத்தில் பல்வேறுவிதமான கருத்துக்கள் கூறப்படுகின்றன ஆனால் இதுதான் உண்மையான கருத்தா அல்லது விளக்கமா என்று யாருக்கும் தெரியாது ஒரு சிலரை தவிர அந்த உண்மையான காரணங்கள் என்ன. 

1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

      மருமகளுக்கும் மாமியாருக்கும், கல்தோன்றி, மண்தோன்றாக் காலத்திலிருந்தே ஒத்துவராது என்பது வரலாறு. ஆனால் “வரலாறு முக்கியம் அமைச்சரே” என்று மருமகளைக் கொடுமைப்படுத்தினால், மாமியாரின் மகன் தலையில் பூரிக்கட்டை விழுவதை யாராலும் தடுக்க முடியாது. தனது மகனைப் பூரிக்கட்டையிலிருந்துக் காப்பாற்ற வேண்டுமென்று விரும்பினால், இன்னொரு வீட்டிலிருந்து தன் வீட்டிற்கு வாழவந்த மருமகளை, மாமியார்  நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை செய்யும் பழமொழி. மாமியாருக்கு மட்டுமல்ல, அவர் மகனுக்கும் சேர்த்தே எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது இந்தப் பழமொழி மூலம்.

உண்மை காரணம் :

    மனைவி கருவுற்றிருக்கும்போது, அவளை நன்றாக கவனித்துக் கொண்டால், அவள்  வயிற்றில் வளரும் தனது  குழந்தை நன்றாக வளரும் என்ற பொருளும் உண்டு. இது கணவனுக்கு அறிவுரை சொல்லும் வகையில் சொல்லப்பட்டுள்ளது. பிறர் வீட்டிற்கு வாழச்செல்லும் பெண்ணை, நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாமியாருக்கும், அந்த பெண்ணின் கணவருக்கும் சொல்லப்பட்ட அறிவுரைதான் இது.


2.அரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல;

       இங்கு அரசன் என்பது அரசமரத்தைக் குறிக்கும். பொதுவாகப் பெண்கள் குழந்தைப் பேறு வேண்டி அரசமரத்தை சுற்றுவது வழக்கம். அரசமரத்தை சுற்றினால் குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. என்னதான் நம்பிக்கையுடன் அரசமரத்தை சுற்றினாலும், கணவனை சுற்றி வந்தால்தானே குழந்தை பிறக்கும். கணவனை சுற்றாமல், அரசமரத்தைச் சுற்றுவதில் ஒரு பயனில்லை என்பதை உணர்த்தச் சொல்லப்பட்டதுதான்  இந்தப் பழமொழி.


       “அரசனை நம்பி, கட்டியக் கணவனைக் கைவிட்டுப் போனவள்” என்று ஒரு இழிவான தகவலைப் பழமொழிகள் நமக்கு ஒருபோதும் தராது. ஆகையால், பழமொழியைத் தவறாகப் புரிந்துகொள்ள வேண்டாம். இங்கு அரசன் என்பது அரசமரத்தை மட்டுமே குறிக்கும்.


3.கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை;

        கோரைப் புல்லில்தான் பாய் தைப்பார்கள். கழு என்பது ஒருவகை கோரைப்புல். அந்த கழு என்ற கோரைப்புல்லைப் பயன்படுத்தித் தைக்கப்பட்ட பாயில் கற்பூர வாசனை வருமாம். இதைச்  சொல்வதற்குதான் “கழு தைக்கத் தெரியுமாம் கற்பூர வாசனை” என்று சொன்னார்கள். காலப்போக்கில் கழுதை உள்ளே வந்துவிட்டது. இனி ஒருபோதும் கற்பூரத்தைக்  கழுதையிடம் கொண்டுபோய் காட்டி உதை வாங்கிக் கொள்ளாதீர்கள்.


4. ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான்;

   ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன்.

உண்மையான விளக்கம் :

ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான்.

நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான்.


5. களவும் கற்று மற;

   தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும். 

உண்மையான விளக்கம் ;

களவும், கத்தும் மற

களவு – திருடுதல்; கத்து- பொய் சொல்லுதல். தீய பழக்கமான திருடுதல், பொய் சொல்லுதல் இவற்றை ஒருவன் தன் வாழ்நாளில் மறந்து ஒழுக்கமாக இருக்க வேண்டும்.


6. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்;

       ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .

உண்மையான விளக்கம் :

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.

 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 

2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 

3.ஒழுக்கம் தவறும் மனைவி;

4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு;

5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை.

 இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.


7. பந்திக்கு முந்து ! படைக்கு பிந்து !

      பந்திக்கு முதலில் போய் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இல்லாவிடில் பலகாரம் நமக்கு முழுமையாக கிடைக்காது போருக்கு செல்பவன் படைக்கு பின்னால் நின்று கொள்ள வேண்டும். அப்படி செய்தால் உயிருக்கு ஆபத்து வராது.

உண்மையான விளக்கம் :

      பந்திக்கு முந்து என்பது சாப்பிட போகும் போது நமது வலது கை எப்படி முன்னோக்கி செல்கிறதோ, அது போல போரில், எவ்வளவு தூரம் வலதுகை வில்லின் நாணலை பிடித்து பின்னால் இழுக்கிறதோ, அந்த அளவுக்கு அம்பு வேகமாய் பாயும். இது போருக்கு போகும் வில் வீரருக்காக சொல்லியது ஆகும்.


8. சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும்;

    சட்டியில் என்ன (சோறு) இருக்கிறதோ அது தான் நமக்கு கிடைக்கும். 

உண்மையான விளக்கம் :

     சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை வரும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்தர் சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் குழந்தை உருவாகும் என்று பொருள் கொள்ள வேண்டும்.


      அந்த காலத்தில் பழமொழிகள் நம் வாழ்க்கையோடு கலந்து விட்டன பிரிக்க முடியாததாக இருந்து வந்தன.

Post a Comment

2 Comments

  1. அருமையான பதிவு ஐயா👌😊

    ReplyDelete
  2. நன்றி பா...
    வருக...

    ReplyDelete