பிள்ளை வளர்ப்பான்
நமது முன்னோர்கள் நமக்கு சில மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகைகளை விட்டு சென்றுள்ளனர். அந்த மூலிகைகளைப் பயன்படுத்தி இன்றளவும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக பயன்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் நம் வாழ்க்கையோடு மூலிகை பொருள்கள் கலந்து விட்டன அவற்றை நம் முன்னோர்கள் முறையாக பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில் இவை மறைந்து வருகின்றன ஆனால் இயற்கையான மூலிகைகள் தான் நமக்கு பக்கவிளைவு எதுவும் தராது என்று கூறலாம்.
அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது. வசம்பு என்ற மூலிகை ஒரு சிறந்த கிருமி நாசினியாக பயன்படக்கூடியது. எல்லா நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். பாட்டி வைத்தியத்தில் இந்த வசம்பை அடிக்கடி சேர்த்துக் கொள்வார்கள். இதற்கு 'பிள்ளை வளர்ப்பான்' என்ற பெயரும் சில கிராமங்களில் நடைமுறையில் உள்ளது.
வசம்பு ஆறு, ஏரிக்கரையோரங்களில் வளரும் ஒரு வகைப் பூண்டு. இதன் பிறப்பிடம் தென் கிழக்கு அமெரிக்கா. இது இந்தியாவில் மணிப்பூரிலும், நாகமலையிலும் கேரளாவிலும் அதிகமாக வளர்கிறது. சதுப்பு நிலங்கள், களிமண் மற்றும் நீர் பிடிப்புள்ள பகுதிகள் மிகவும் ஏற்றவை. வசம்பு இஞ்சி வகையைச் சேர்ந்த மூலிகை. வசம்பின் வேர்கள் பழங்காலம் முதல் மருந்துகள் தயாரிப்பதற்குப் பயன்படுகிறது.
1. காய்ந்த வசம்பை பொடி பண்ணி அதிலிருந்து 1/2 ஸ்பூன் எடுத்து பாலில் கலந்து கொதிக்கவிட்டு, வடிகட்டி குழந்தைகளுக்கு கொடுத்தால் பசியின்மையோ, சிறு சிறு தொற்று நோய்களோ வராது. 6 மாதத்திற்குட்பட்ட வயதுள்ள குழந்தையாக இருந்தால் ஒரு சிட்டிகை வசம்பு பொடி போதுமானது.
2. தொற்று நோய் அண்டாமல் இருக்க வசம்பை சிறிய மணி அளவில் பொடிதாக நறுக்கி நூலில் கோர்த்து (தேவைப்பட்டால் அழகுக்கு இடையிடையே கறுப்பு, வெள்ளை மணிகள் கோர்த்து) பிள்ளையின் கைகளில் வளையமாக கட்டிவைப்பார்கள்.
3. வசம்பை தூள் செய்து 2 ஸ்பூன் எடுத்து தேனில் கலந்து வாரம் ஒருமுறை சாப்பிட்டு வந்தால், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஜீரணம் கொடுக்கக் கூடியதாகவும் பலவித தொற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்தாகவும் அமையும்.
4. விஷத்தன்மை கலந்துவிட்ட உணவை யாரும் சாப்பிட்டுவிட்டாலோ அல்லது விஷத்தையேசாப்பிட்டிருந்தாலும் 2 அல்லது 3 டீஸ்பூன் பொடியாக்கிய வசம்பை தண்ணீரில் கரைத்து உடனே கொடுத்தால் விஷம் வெளியே வந்துவிடும் என்று சொல்வார்கள்.
5. கால்நடைகளுக்கு தொற்றுநோய் வராமல் தடுக்க வசம்பு தூளுடன் மஞ்சள்தூள் கலந்து கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.
6. வயிற்றுவலியால் தொடர்ந்து கஷ்டப்படும் குழந்தைகளுக்கு வசம்பை தீயில் சுட்டு மருந்து உரைக்கும் கல்லில் வைத்து தேய்த்து பவுடராக்கி, 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் குழைத்து, குழந்தையின் தொப்புளை சுற்றி பற்று போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
7. வசம்புடன் திரிகடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தோல், கருப்பு உப்பு ஆகியவற்றில் சிறிதளவு சேர்த்து, நன்கு இடித்து பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும். மன நிலை பாதிப்பு கொண்டவர்களுக்கு கொடுத்து வர சித்தம் தெளியும்.
8. கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கும், தலைமுடிகளை முறையாக பராமரிக்காதவர்களுக்கும் பொடுகு தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது. பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கிறது. நசுக்கிய வசம்பு, சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணையில் கொதிக்க வைத்து, ஆற வைத்து அந்த எண்ணையை தலைக்கு தடவி வந்தால் பொடுகு தொல்லை சீக்கிரம் குணமாகும்.
9. வாதம் உடலில் அதிகரிக்கும் போது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்து கொண்டு, வலியை ஏற்படுத்த கூடியதாக இருக்கிறது. வாதத்தில் குறிப்பாக கீல்வாதம் எனப்படும் வாத நோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்க கூடியதாக இருக்கிறது. வசம்பை காசி கட்டியுடன் சேர்த்து சிறிது நீர்விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீல்வாதம் போன்ற அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
10. திக்குவாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சிறிய பாதிப்பால் உண்டாகும் ஒரு பிரச்சனையாகும். இந்த திக்குவாய் பிரச்னையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டு குழைத்து திக்குவாய் பாதிப்பு கொண்டவர்களின் நாவில் தடவி வந்தால் திக்குவாய் குணமாக உதவும்.
நம் முன்னோர்கள் வேர் பட்டை இலை தலைகள் பழங்கள் காய்கள் என ஒவ்வொன்றிலும் மருத்துவ குணங்களை அறிந்து வைத்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் எந்த நோய்களுக்கு இவை உடனடி மருத்துவம் செய்ய பயன்படும் என்றும் அறிந்துள்ளனர். அதை அப்படியே விடாமல் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் ஒரு சில புத்தகங்களில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளனர். அந்த மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஒரு சிலர் மூலமாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது.

0 Comments